https://www.instagram.com/reel/CWHVs48AbVv/?utm_source=ig_web_copy_link
காதுகேளாத தந்தையிடம் தனது சைகையால் பேசிய 19 மாதக் குழந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மாற்றுத்திறனாளி அமெரிக்கரான சச்சர் சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குத் தன் 19 மாத மகளான மேடிஷனுடன் சென்றிருந்தார். அங்கு ஒரு சிறுமி அழுதுகொண்டிருப்பதை மேடிஷன் பார்த்தாள். அந்தச் சிறுமி அழுவதைத் தனது தந்தைக்குத் தெரிவிக்க விரும்பியது அந்தக் குழந்தை.
உடனே தன் கையிலிருந்த பொருட்களைக் கீழே வைத்துவிட்டு சைகை மொழிமூலம் தந்தையிடம் தெரிவித்தாள். அதைக்கண்டு குழந்தை அழுகிறதா என்று தந்தை மறுபடியும் கேட்க, அழுதுகொண்டிருக்கும் குழந்தை இருக்கும் திசையை சைகை மொழியில் தந்தையிடம் உணர்த்தினாள்.
முதன்முதலாகத் தன் 19 மாதக் குழந்தையான மேடிஷனின் சைகை மொழியைப் பார்த்துப் பிரம்மித்துப் போனார் காது கேளாத தந்தையான சச்சர்.
வீட்டில் குடும்பமாக இருக்கும்போது மூவருமே சைகை மொழியால்தான் பேசிக்கொள்வார்களாம். குழந்தையின் தாய் பேசும் திறன்கொண்டவர் என்பதால், மகளுக்கு ஆங்கிலத்தில் பேசவும் கற்றுக்கொடுத்து வருகிறார். அவற்றையெல்லாம் நன்கு கவனித்து ஆழமாக மனதில் பதியவைத்துக்கொண்டிருக்கிறாள் மேடிஷன்.
பெற்றோர் கற்றுக்கொடுத்த பின்னரே, பேசக் கற்கும் குழந்தைகளுக்கு மத்தியில், 19 மாதக் குழந்தை சைகை மொழியில் தந்தையிடம் பேசியது தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
குழந்தைகளிடம் அபரிமிதமான ஆற்றலும், திறமையும் பொதிந்துகிடப்பதையே குழந்தை மேடிஷனின் சைகை மொழி உணர்த்துகிறது.
நெகிழ்ச்சியான அந்தத் தருணத்தை நினைத்துப் பூரிப்பில் உள்ளனர் மேடிஷனின் பெற்றோர்.