Sunday, December 28, 2025

”என் காயத்துக்கு ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர்…’’ மருத்துவமனைக்குள் ஓடிவந்த மான்

காயமடைந்த மான் ஒன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் ஓடிவந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில்தான் இந்த வியத்தகு சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக Face Bookல் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், பேடன் ரூஜ் நகரிலுள்ள மருத்துவமனைக்குள் மான் ஒன்று வேகமாக ஓடிவருகிறது. கார் ஒன்று மோதியதால் காயம் அடைந்ததாகக் கருதப்படும் அந்த மான் குளம்புகள் காயம் ஏற்பட்டுள்ளது. அந்தக் காயங்களுடன் வலியைத் தாங்கிக்கொண்டு ஓடிவருகிறது.

வலியை அதிகரிக்கும்விதமாக வரவேற்பறையில் உள்ள டைல்களில் ஓடிவரும்போது வழுக்கி விழுகிறது. இருந்தாலும் மீண்டும் எழுந்து எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல், எஸ்கலேட்டரில் தாவித் தாவி இரண்டாவது தளத்தை அடைகிறது.

ஒருவழியாக, அந்த மானைப் பார்த்துவிட்ட மருத்துவர்கள் அதனைப் பரிசோதிக்கின்றனர். வாயில் ரத்தத்தடன் காணப்பட்ட அந்த மான் அப்போது மயக்கம் அடைகிறது.
உடனடியாக, அங்கிருந்த மருத்துவர்கள் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்கத் தொடங்குகின்றனர்.

என்றாலும், இறுதியில் மருத்துவர்கள் செய்ததுதான் கொடூரம்… மானைக் காப்பாற்ற முடியாமல் கருணைக் கொலை செய்துவிட்டனர். அதைக் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் கருணையுள்ளம் கொண்டவர்கள்.

தனக்கு சிகிச்சை வேண்டி விவேகமாக மருத்துவமனையைத் தேடிவந்த மானின் புத்திக்கூர்மையை நினைத்து மகிழ்வதா? காப்பாற்ற முடியாமல் மரணத்தை எதிர்கொண்ட அந்த ஜீவனுக்காகப் பரிதாபப்படுவதா? மானின்மீது காரை மோதியவரின் கருணையற்ற செயலைக் கண்டிப்பதா?

Related News

Latest News