உணவு டெலிவரி செய்யச் சைக்கிளில் சென்றுவந்தவருக்கு இணையவாசிகள் ஒன்று சேர்ந்து பைக்கை பரிசளித்த உணர்ச்சிவசப்பட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
ட்விட்டர் பயனாளர் ஆதித்யா ஷர்மா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், சைக்கிளில் உணவு டெலிவரி செய்துவந்த நபரை எப்படி சந்தித்தார் , அடுத்து அவருக்கு என்ன நடந்தது என முழு விவரத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ,
இன்று எனது ஆர்டர் சரியான நேரத்தில் எனக்கு டெலிவரி செய்யப்பட்டது மற்றும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, இந்த முறை டெலிவரி பாய் சைக்கிளில் வந்துருந்தார்.இன்றைய வெப்பநிலையோ சுமார் 42 டிகிரி செல்சியஸ், ராஜஸ்தானின் இந்த கடுமையான வெப்பத்தில் அவர் எனது ஆர்டரை சரியான நேரத்தில் வழங்கினார்.
இதையடுத்து அவரைப் பற்றிய சில தகவல்களைக் கேட்டேன்,அவர் பெயர் துர்கா மீனா,வயது 31 .கடந்த நான்கு மாதங்களாக உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துவருகிறார்.
அவர் ஒரு ஆசிரியர், கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிவந்த அவர் கொரோன ஊரடங்கு காரணமாக வேலையை இழந்தார், மேலும் அவர் என்னுடன் ஆங்கிலத்தில் பேசினார், அவர் B.COM முடித்துள்ளார், மேலும் M.COM ஐத் தொடர விரும்புகிறார், ஆனால் அவரது நிதி நிலைமை காரணமாக, அவர் இந்த வேலையை செய்ய தொடங்கினர்.
மேலும் , அவருக்கு இணையத்தைப் பற்றி எல்லாம் தெரியும், துர்கா என்னிடம் நல்ல வைஃபையுடன் தனது சொந்த மடிக்கணினியை வைத்திருக்க விரும்புவதாகக் கூறினார், அதனால் அவர் மாணவர்களுக்கு ஆன்லைனில் கற்பிக்க முடியும் என்றார்.
இந்த விவரங்களை ட்விட்டர் பயனாளர் ஆதித்யா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சம்மந்தப்பட்ட நபருக்கு உதவ வேண்டும் என மற்ற ட்விட்டர் பயனாளர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அவர் இதை பதிவிட்டு 24 நேரத்திற்குள், துர்கா மீனாவிற்கு உதவ முடிந்தது. அதாவது அவருக்கு புதிய பைக்கை பரிசளித்துள்ளனர்.ஷர்மாவின் இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் பலரும் தானாக வந்து உதவி மனப்பான்மையுடன் தங்களால் முடிந்த தொகையை அனுப்பியுள்ளனர்.
போதுமான தொகை சேர்ந்தவுடன், துர்கா மீனாவை தொடர்புகொண்டு நேரில் வரவழைத்து, அவருக்கு பிடித்த பைக்கை வாங்கி அவரிடம் ஒப்படைத்தார் ஆதித்யா ஷர்மா. இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையும் துர்கா மீனா பைக்குடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.
பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படவைக்கும் இந்த பதிவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர் இணையவாசிகள்.