உடம்பின் தேவைக்கேற்ப ஆக்ஸிஜனை வழங்கும் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் ஆடையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் OMNI FIBRE என்னும் புதிய வகை துணியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்தத் துணி உடம்பின் தேவைக்கேற்ப ஆக்ஸிஜனை வழங்கும்.
விளையாட்டு வீரர்கள், மேடைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோருக்குப் பயன்படும் வகையில் இந்தப் புதிய வகை துணி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துணிகளைத் தைத்து ஆடையாக உடுத்திக்கொண்டால், நேரடியாக உடலுக்குள் ஆக்ஸிஜன் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோர் சுவாசப் பிரச்சினையிலிருந்து விடுபடவும் உதவும் என்று இந்தத் துணியை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடை அணிபவரின் உடலுக்குத் தகுந்தாற்போல தானாக சரிப்பட்டு, அதற்கேற்ப சுருங்கி விரிவடையும். உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்போதெல்லாம் இது ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கும்.
ஆம்னி பைபர் நூலிழையால் நெய்யப்பட்ட இந்தத் துணியில் பல அடுக்குகள் உள்ளன. நடுவில் ஒரு திரவன சானல் உள்ளது. இந்தத் துணியை உடுத்தியுவுடன் அந்தத் திரவ சானல் செயல்படத் தொடங்கும்.
இதிலுள்ள சென்சார்கள் அந்தத் துணியின் நீட்சியைத் தீர்மானிக்கின்றன. அந்தத் திரவ சானல்கள் உடனடியாக வெளியிலிருந்து ஆக்ஸிஜனை இழுக்கத் தொடங்கி அதைத் தோலுக்குள் கொண்டுசெல்கின்றன.
பாலிஸ்டர் துணியைப்போல உள்ள இந்த மெல்லிய துணி மனிதத் தோலுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தத் துணியைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.