Thursday, December 26, 2024

தயிருக்காக நின்ற ரயில்

மனைவிக்கு தயிர் வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் ஆன்லைனில் வைரலாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் லாகூர் நகரிலிருந்து கராச்சி நகருக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது கஹ்னா ரயில் நிலையம் அருகே திட்டமிடப்படாத இடத்தில் நின்றது. அது ரயில் நிறுத்தம் இல்லையென்பதால், எதற்காக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியாமல் பயணிகள் குழம்பினர்.

சில நிமிடங்கள் கழித்து ரயில் டிரைவரின் உதவியாளர் ஒருவர் தண்டவாளத்துக்கு வெளியேயுள்ள தெருவிலிருந்து கேரி பேக்கில் தயிர் கொண்டு மிகவும் அலட்சியமாக எஞ்ஜினுக்குத் திரும்பி வந்தார். அதன்பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்குச் சென்றது. அதைத் தொடர்ந்து டிரைவரையும் அவரின் உதவியாளரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது அந்த அமைச்சகம்.

தேசியச் சொத்துகளைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக அனுமதிக்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டு ரயில்வே அமைச்சர்.

மனைவி மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால் ரயிலையே நிறுத்தி தயிர் வாங்கியிருப்பார் என்று கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர் வலைத்தளவாசிகள்.

Latest news