Wednesday, January 15, 2025

3 நாட்களாக மலை விளிம்பில் தொங்கிய டிரக்….பிறகு நடந்தது என்ன?

3 நாட்களாக மலையின் விளிம்பில் தொங்கிய டிரக்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் மலைக்குன்றின் குறுகிய பாதையில் சமீபத்தில் பெரிய கன்டெய்னர் டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவது எளிதான செயல் அல்ல என்றாலும், நேவிகேஷன் செயலியில் உள்ள திசைகளைப் பின்பற்றி அந்தக் குறுகிய பாதையில் டிரக்கை ஓட்டிச் சென்றுள்ளார் அதன் டிரைவர்.

அப்போது தவறான பாதையில் செல்வதாக உணர்ந்த டிரைவர், டிரக்கைப் பின்னோக்கி ஓட்டிக்செல்ல முயன்றுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக சாலையிலிருந்து டிரக் சற்று விலகி பள்ளத்தை நோக்கிச் சென்றுள்ளது.

என்றாலும், சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர், டிரக் பள்ளத்தில் விழாதபடி பிரேக்கைப் பிடித்து நிறுத்திவிட்டார். டிரைவரும் அவருடன் இருந்தவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், 3 நாட்களாக மலைப்பாதையின் விளிம்பில் தொங்கியபடியே டிரக் இருந்தது. பின்னர், ஃபோர்க் லிப்ட் மற்றும் பல லோடர்களின் உதவியுடன் விளிம்பிலிருந்து டிரக் மீட்கப்பட்டு சாலைக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னரே அந்த மலைப்பாதையில் பிற வாகனங்கள் செல்ல வழி ஏற்பட்டது.

வளைந்த சாலைகளில் வாகனத்தை ஓட்டிச்செல்வது சில ஓட்டுநர்களை மயக்கமடையச் செய்துவிடும். ஆனால், டிரக் டிரைவரோ அசாத்திய நம்பிக்கையோடு சென்று ஆபத்தில் சிக்கி எந்தப் பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டுள்ள செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest news