Friday, December 27, 2024

80 வயது பாட்டியைக் காப்பாற்றிய விளையாட்டு

80 வயது பாட்டியின் உயிரை விளையாட்டு காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

சிறுவர்கள், இளைஞர்கள்தானே எப்போதும் விளையாடுவார்கள் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், எந்த வயதினரும் விளையாடலாம். அதனால், நன்மையே நடக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு சம்பவம்.

அங்குள்ள இல்லினாய்ஸ் பகுதியில் வசித்து வருபவர் டெனிஸ் ஹோல்ட். 80 வயதாகும் ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் தினமும் வேர்ட்லே விளையாடுவது வழக்கம். விளையாட்டின் ஸ்கோரைத் தவறாது தனது மகள்கள் இருவருக்கும் அனுப்பி வந்தார். மகள்கள் இருவரும் தனித்தனியாக சியாட்டில் நகரில் வசித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஒரு நாள் தங்களின் அம்மாவிடமிருந்து ஸ்கோர் பற்றிய தகவல்கள் வராததால், மகள்கள் இருவரும் பதற்றமடைந்தனர். உடனடியாகத் தங்கள் அம்மாவின் செல்போனைத் தொடர்புகொண்டனர். அந்த அழைப்புகளுக்கு டெனிஸ் ஹோல்ட் பதிலளிக்கவில்லை. அதனால் மகள்கள் இருவரும் கவலைப்பட்டனர்.

உடனே, பக்கத்து வீட்டுக்காரர்களைத் தொடர்புகொண்டு தங்கள் அம்மாவை நேரில்சென்று பார்த்துவிட்டு வரும்படி வேண்டினர். அவர்கள் சென்று பார்த்தும் அம்மாவைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ள முடியாமல் போனது. இதனால், மேலும் பதற்றமடைந்த அவர்கள் காவல்துறையை அணுகி உதவி கோரினர்.

அதனை ஏற்று டெனிஸ் வீட்டுக்குச்சென்ற காவல்துறையினர், உடைந்த ஜன்னல் ரத்தத்துடன் இருப்பதைக் கண்டனர். காவல்துறையினர் வேறொரு சாவியைக்கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே சென்றனர்.

அங்கே குளியலறைக்குள் வைத்து டெனிஸ் பூட்டப்பட்டிருப்பதைக்கண்ட அவர்கள் பூட்டை உடைத்து டெனிஸை மீட்டனர். அதன்பிறகே, டெனிசும் அவரது மகள்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Latest news