ரஷ்ய- உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் அறிவிப்பு ஒன்று உக்ரைன் மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன்மீது ரஷ்யா திடீர்த் தாக்குதலைத் தொடங்கியது. திடீர்த் தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்து போய்விடும் என்றே பல நாடுகள் கருதிவந்தன.
ஆனால், எந்த விதத்திலும் சளைத்தவனில்லை என்கிற விதத்தில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து வருகிறது உக்ரைன். அத்துடன் தன் வீரதீரங்களால் ரஷ்யாவே மிரண்டுபோகும் அளவுக்குப் பதிலடி கொடுத்துவருகிறது.
உணவுப்பொருள்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குக்கூட போர் நிறுத்த வேளை அறிவிக்கப்படாமல், தொடர்ந்து கடுமையான போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்துவருகின்றனர். அங்குள்ள அயல்நாட்டு மக்களும் பதுங்கிப் பதுங்கி வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் போரின் 5 ஆவது நாளான திங்கள்கிழமையான அன்று உக்ரைனில் போர் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி தலைநகர் கீவ்நகர் உள்பட பெரும்பாலான நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த சந்தர்ப்பத்தில் கீவ் நகரிலிருந்து பாதுகாப்பாகப் பொதுமக்கள் வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கீவ் நகரில் ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே போரை நிறுத்துவது தொடர்பான சமாதானப் பேச்சு பெலாரஸ் நாட்டில் நடைபெற உள்ளது.
இதனால், பெரும்பாலான உக்ரைன் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.