கனடாவில் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி! ஒரு காலத்தில் இந்திய மாணவர்களை இருகரம் நீட்டி வரவேற்ற கனடா, இப்போது கதவுகளை இறுக்கமாக மூடத் தொடங்கியுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும், இந்திய மாணவர்களின் 74% ஸ்டூடண்ட் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை எவ்வளவு பெரியது என்றால், கடந்த 2023-ல் வெறும் 32% விசாக்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டன. ஆனால், இப்போது அது இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒப்பிட்டுப் பார்த்தால், மற்ற நாட்டு மாணவர்களின் விசா நிராகரிப்பு விகிதம் வெறும் 40% ஆக மட்டுமே உள்ளது. சீன மாணவர்களைப் பொறுத்தவரை, 24% விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஏன் இந்தத் திடீர் நிராகரிப்பு? என்றால்,
அதற்கு காரணம், “மோசடி”. 2023-ல் மட்டும், சுமார் 1,550 போலி கல்லூரி சேர்க்கை கடிதங்களைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து விசாவுக்கு விண்ணப்பித்ததை கனடா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அடுத்த ஆண்டோ, 14,000-க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான கடிதங்கள் சிக்கின. இந்த மோசடிகளைத் தடுக்கவே, கனடா இப்போது தனது விதிகளை கடுமையாக்கியுள்ளது. கடுமையான ஆவணச் சரிபார்ப்பு, அதிக நிதி ஆதாரங்களைக் காட்டுவது எனப் பல புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.
இந்த விசா நிராகரிப்புகளுக்குப் பின்னால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. கனடாவில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது, அதை இந்தியா கடுமையாக மறுத்தது. இந்த மோதல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ளது.
இந்தியத் தூதரகம், “இந்திய மாணவர்கள் உலகின் சிறந்த மாணவர்கள், கனடா அவர்களை வரவேற்க வேண்டும்,” என்று கூறியுள்ளது. ஆனால், கனடாவோ, “எங்கள் குடியேற்ற முறையின் நேர்மையைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை,” என்கிறது. அரசியல் பதற்றங்களுக்கும், மோசடிகளுக்கும் இடையில், கனடாவில் படிக்க வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
