சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று சரக்கு ரெயில் பின்புறத்தில் பயணிகள் ரெயில் பயங்கரமாக மோதில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அந்த விபத்தின் தாக்கம் மறைவதற்குள், இன்று (05.11.2025) காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் மிர்சாப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
அதாவது, மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் உள்ள சனார் ஜங்ஷன் பகுதியில் இன்று காலை 9 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று 4-வது நடைமேடை பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் 3-வது நடைமேடையை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
பயணிகளில் மற்றொரு பிரிவினர் தண்டவாளத்தை கடந்து அடுத்த பக்கம் செல்வதற்கு நடந்து கொண்டிருந்த போது, எதிர் திசையில் இருந்து மிக வேகமாக ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
ரெயில் மிக அருகில் வந்த போதுதான் பயணிகள் கவனித்து அலறினார்கள். 4-வது நடைமேடைக்கும், 3-வது நடைமேடைக்கும் இடையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அதற்குள் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர்.
குறிப்பாக, அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சனார் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய ரெயில் ஆகும். இதனால் அந்த ரெயில் வேகமாக வந்ததாக சொல்லப்படுகிறது. ரெயில் மோதிய வேகத்தில் 3 பயணிகளின் உடல்கள் கடுமையாக சிதறி போனது. மேலும், மொத்தமாக 6 பேர் பலியாகினர், இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில், பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும், மேலும் அவர் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார். இச்சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
