கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கரூரில் போலி பான்கார்டு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கரூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஒரு அறையில் போலி பான்கார்டுகள் தயாரிக்கும் கும்பலை கண்டறிந்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கருர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், கார்த்திக், நவீன சேகர், சம்பத், சீனிவாசன் மற்றும் கலைவாணி ஆகியோர் என்பதும் ஆறு பேரும் சேர்ந்து போலி பான்கார்டு தயாரித்து ஆதார் கார்டு எடுக்க பயன்படுத்தியதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 130 போலி பான்கார்டுகள், 69 செயற்கை படிவங்கள், ஒரு மடிக்கணினி, ஆறு செல்போன்கள், போலிப் பான்கார்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,000 பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டுகள் பெற்றுக் கொடுத்து உள்ளனர். ஒரு கார்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை பெற்று உள்ளனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? அவர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது. என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.