உலக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்வலை கிளம்பியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இப்போது ஈரான் நாடாளுமன்றம் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரையும் கொலை செய்பவர்களுக்கு, சுமார் 58 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 480 கோடி ரூபாய்க்கும் மேல் வெகுமதி அளிக்கப்படும் என ஈரான் நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
“டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புபவர்களுக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் இப்ராஹிம் அஸிஸி பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய ரத்த சரித்திரமே இருக்கிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது டிரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) கமாண்டர் பிராட் கூப்பர் தான் என்று ஈரான் கருதுகிறது.
இதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த ‘பவுண்டி’ எனப்படும் தலைக்கான பரிசுத் தொகையை ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஈரான் ஆதரவு ஊடகங்கள் ‘கில் டிரம்ப்’ (Kill Trump) என்ற பெயரில் நிதி திரட்டி வருவதாகச் செய்திகள் வெளியான நிலையில், இப்போது அந்த நாட்டின் நாடாளுமன்றமே சட்டப்பூர்வமாக இந்த மசோதாவைக் கொண்டு வருவது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
இதற்கு முன்பு ஒருமுறை டிரம்ப் பேசும்போது, “ஈரான் என்னை எதாவது செய்ய நினைத்தால், அந்த நாட்டை பூமியின் வரைபடத்திலிருந்தே துடைத்து எடுத்துவிடுவோம்” என்று மிகக் கடுமையாக எச்சரித்திருந்தார். தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று வாஷிங்டன் தரப்பில் சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில் ஈரானின் இந்த அதிரடி மசோதா, தற்காலிக போர் நிறுத்தத்தை உடைத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
