8-வது ஊதியக் குழுவின் 5 முக்கிய தகவல்கள்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல ஆண்டுகாலக் காத்திருப்பிற்கு விடை கிடைக்கப்போகும் தருணம் நெருங்கிவிட்டது. 8-வது ஊதியக் குழு தொடர்பான பணிகள் தற்போது நாடு முழுவதும் புதிய வேகமெடுத்துள்ளன. கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளில், ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எனப்படும் பொருத்தக் காரணியே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

புதிய அடிப்படைச் சம்பளத்தை நிர்ணயிக்கும் இந்த முக்கிய காரணி குறித்து, நிதிக் குழு தற்போது பல்வேறு ஊழியர் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப, ஊழியர்களின் ஊதியத்தை எவ்வளவோ உயர்த்தலாம் என்பதே இந்த ஆலோசனைகளின் மையப்புள்ளியாக உள்ளது.

ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்பது ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை எத்தனையால் பெருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஒரு சூத்திரமாகும். உதாரணமாக, கடந்த ஏழாவது ஊதியக் குழுவின் போது இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால்தான் அன்றைய காலகட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிரடியாக 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.

தற்போது வரவிருக்கும் 8-வது ஊதியக் குழுவில் இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.28 முதல் 3.83 வரை இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். உங்கள் தற்போதைய அடிப்படைச் சம்பளத்தை இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டரால் பெருக்கினால் கிடைக்கும் தொகையே உங்களது புதிய அடிப்படைச் சம்பளமாக இருக்கும் என்பதால், ஊழியர்கள் இந்த எண்ணை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கால அட்டவணையைப் பொறுத்தவரை, 2025 நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட இந்த 8-வது ஊதியக் குழுவிற்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால ஊதியக் குழுக்களின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வரும் 2027 ஜூலை 25-க்குள் இந்த ஊதியக் குழு தனது இறுதிப் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு அது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வர சுமார் 21 மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பணவீக்க விகிதம் மற்றும் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வரும் இந்த ஆணையம், ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு முடிவை எடுக்கும் என்றே தெரிகிறது.

அரசாங்கம் எடுக்கப்போகும் இந்த ஒரு முடிவு, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மாற்றியமைக்கப் போகிறது. தற்போது அகவிலைப்படி 60 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்த அறிவிப்புதான் ஊழியர்களின் உண்மையான சம்பள உயர்வைத் தீர்மானிக்கும்.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் இந்த ஊதியச் சீரமைப்பு, நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஊதியக் குழுவின் இறுதி அறிக்கைக்காகவும், அதன் மூலம் கிடைக்கப்போகும் புதிய ஊதிய உயர்வுக்காகவும் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Related News

Latest News