Wednesday, February 5, 2025

56 வயது பெண்ணின் வயிற்றில் 47 கிலோ கட்டி

56 வயது பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது திகிலூட்டியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 39 ஆவது வயதிலிருந்து திடீரென்று உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து 18 ஆண்டுகளாக எடை கூடிக்கொண்டே இருந்தது. இதனால், கடும் அவதிப்படத் தொடங்கிய அப்பெண் மருத்துவரிடம் சென்று ஆலோசித்துள்ளார்.

அப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவக் குழு, அந்தக் கட்டி உடலினுள் பிற உறுப்புகளோடு இணைந்துள்ளதால், அறுவைச்சிகிச்சை செய்தால் ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால், அறுவை சிகிச்சை செய்யாமலேயே 18 ஆண்டுகளாக அவஸ்தையைத் தாங்கி வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் அந்தக் கட்டியின் அளவு 2 மடங்கு பெரியதாகியுள்ளது. அதன் காரணமாக கடும் வலியால் துடிக்கத் தொடங்கிய அப்பெண் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் அவதிப்படத் தொடங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு 8 மருத்துவர்கள் கொண்ட குழு 4 மணி நேரம் ஆபரேஷன் செய்து வயிற்றிலிருந்த கட்டியை அகற்றியுள்ளனர். அந்தக் கட்டி சோனோகிராஃபி என்னும் உடலுக்குத் தீங்கிழைக்காத கருப்பை அல்லாத கட்டி என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, நிம்மதியடைந்துள்ளார் அப்பெண்.

அவரின் தற்போதைய எடை 49 கிலோ.

மருத்துவ உலகை மட்டுமன்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது அந்தக் கட்டி.

Latest news