Thursday, December 26, 2024

உருளைக்கிழங்கில் 4,000 ரகங்கள்

பெரு நாட்டில் ஒரு சந்தையில் 4 ஆயிரம் வகையான உருளைக்கிழங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இவற்றில் ஒரு ரகம் தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.

அந்த 4 ஆயிரம் உருளைக்கிழங்கு ரகங்களில் பெரும்பாலானவை ஆன்டன்ஸ் நாட்டில் காணப்படுகின்றன.

அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுவது உருளைக்கிழங்கு. அடிப்படை உணவுகளுள் ஒன்றாகிவிட்டது உருளைக்கிழங்கு.

உடலை உப்பச் செய்யும் உருளைக்கிழங்கு என்பது பழமொழி. மெலிந்த தேகம் உள்ள குழந்தைகள் கொழுகொழு குழந்தையாக வளர உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொடுக்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் அரசியல் தலைவிதியையே நிர்ணயம் செய்யுமளவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு மாறிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் ஸ்வீட் பொட்டட்டோ விளைகிறதாம்.

உலகளவில் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

உருளைக்கிழங்கின் தாயகமாக ஆன்டன்ஸ் நாடு கருதப்படுகிறது. தென் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நாட்டில் உலகில் மிகநீண்ட மலைத்தொடர் உள்ளது. அந்த மலைப்பகுதியில்தான் பெருமளவில் உருளைக்கிழங்குகள் விளைவிக்கப்படுகின்றன.

எனினும், அவற்றில் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ரகங்கள் பெரு நாட்டில் மட்டுமே விளைபவை. பெருவில் உள்ள இன்கா இந்தியர்கள் கிமு எட்டாயிரமாவது ஆண்டிலேயே உருளைக்கிழங்கைப் பயிரிட்டதாகவும், 1536 ஆம் ஆண்டில் பெரு நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிஷ் நாட்டினர் உருளைக்கிழங்கின் சுவையை அறிந்து ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்றதாகவும் கூறப்படுகிறது.

அங்கிருந்து கடல் பயணிகள் வழியாக ஆசியாக் கண்டம் முழுவதும் பரவியதாகக் கருதப்படுகிறது. இன்டர்நேஷனல் பொட்டட்டோ ரிசர்ச் சென்டர் பெரு நாட்டில் உள்ளது..

Latest news