மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் இப்போது ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பிரம்மாண்ட ஏர்கிராஃப்ட் கேரியர் கப்பல்கள் ஈரானைச் சுற்றி வளைத்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்’ (USS George HW Bush) அந்தப் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
சுமார் 5,000 ராணுவ வீரர்கள் மற்றும் டஜன் கணக்கான அதிநவீன போர் விமானங்களுடன் வந்துள்ள இந்தக் கப்பல், அமெரிக்காவின் ராணுவ வலிமையை ஈரானுக்கு முன்பாகப் பறைசாற்றி வருகிறது. வியட்நாம் போருக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் அமெரிக்கா தனது மூன்று பிரம்மாண்ட கப்பல்களை ஒரே நேரத்தில் நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தக் கப்பலோடு சேர்த்து அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு’ மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ ஆகிய கப்பல்களும் இப்போது களத்தில் உள்ளன. உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஜெரால்ட் ஃபோர்டு, ஈபிள் டவரை விடவும் உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடற்படை வலிமையில் சுமார் 40 சதவீதம் மத்திய கிழக்கு பகுதிகளில் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் இணைந்து ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் ‘ஆர்லீ பர்க்’ (Arleigh Burke) ரகப் போர்க்கப்பல்களும் வலம் வருகின்றன. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தம் நீட்டிப்பு பற்றிப் பேசப்பட்டாலும், களத்தில் இத்தனை பெரிய ராணுவக் குவிப்பு நடப்பது ஒரு பெரிய போருக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடல்வழி முற்றுகையை இந்தப் படை இன்னும் தீவிரப்படுத்தவுள்ளது. உலக நாடுகளின் ஆயில் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா துடிக்கிறது. “நடுக்கடலில் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு ஈரானியப் படகையும் கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்” என்று ட்ரம்ப் தனது கடற்படைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரானும் சளைக்காமல் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜலசந்தியைத் தொடர்ந்து மூடி வைத்துள்ளதால், சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா முதன்முறையாக ‘லோக்கஸ்ட்’ (LOCUST) எனப்படும் அதிநவீன லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஈரானின் மலிவான தற்கொலைப்படை ட்ரோன்களை நடுக்கடலிலேயே பொசுக்கித் தள்ளும் வல்லமை இந்த லேசர் ஆயுதத்திற்கு உண்டு.
ஒருபுறம் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகள் அமைதிக்கு முயற்சி செய்தாலும், அமெரிக்காவின் இந்த அதிரடி ராணுவ நகர்வுகள் ஈரானின் புதிய உச்சக்கட்டத் தலைவர் மோஜ்தபா கமேனிக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் இந்தப் போரின் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
