அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த அரசியல் பயணத்தை பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம். கடந்த 27 ஆண்டுகளில் இவர் மதிமுக, அதிமுக, அமமுக மற்றும் திமுக என தமிழகத்தின் பிரதான கட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
1975ஆம் ஆண்டு கரூரில் பிறந்து வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சொந்த ஊரிலேயே மேற்கொண்ட செந்தில் பாலாஜி, இளம்வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்டு கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு 1995ஆம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார்.
ஒரு வருடத்திற்குள்ளாகவே அங்கிருந்து விலகி திமுகவில் சேர்ந்து 1996ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். நான்கு ஆண்டுகள் திமுகவுடன் பயணித்து பிறகு 2000ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அடுத்த ஆறு மாதங்களில் அவருக்கு மாவட்ட மாணவரணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
2004ஆம் ஆண்டில் மாவட்ட மாணவரணி செயலாளரான செந்தில் பாலாஜி, 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக கரூரில் களம் இறங்கி வெற்றி பெற்றார். கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் என அடுத்தடுத்த கட்சி பொறுப்புகளையும் தனதாக்கினார். திமுக ஆட்சிக்கு எதிராக மணற்கொல்லை விவகாரத்தில் துணிச்சலாக செயல்பட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2015ஆம் ஆண்டு முறைகேடாக பணம் பெற்றதாக அவர் மீது புகார் எழவே அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாய் பிரிய, செந்தில் பாலாஜி உட்பட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு, அமமுகவில் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அமமுக மாநில அமைப்பு செயலாளர் ஆகிய பதவிகள் கிடைத்தன. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு சில நாட்களிலேயே மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத் துறைகளுக்கு அமைச்சர் ஆன செந்தில் பாலாஜி தற்போது வருமானத்திற்கு அதிகமான பணத்தை வைத்திருப்பதாக அமலாக்கத்துறையினரிடம் பெரும் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார். இந்த விவகாரம் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக முடியுமா அல்லது திருப்புமுனையாக மாறுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.