பூமிக்கு அடியில், வெளிச்சமே இல்லாத இருண்ட உலகத்தில், காலத்தால் உறைந்து போன ஒரு மர்மம்… 325 மில்லியன் ஆண்டுகளாகக் காத்திருந்த ஒரு ரகசியம்… இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய குகையான, அமெரிக்காவின் மாமத் குகைக்குள், டைனோசர்களுக்கெல்லாம் மூத்த இரண்டு பிரம்மாண்ட கடல் அரக்கர்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்!
கென்டக்கியின் மலைகளுக்கு அடியில், 676 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டிருக்கும் இந்த மாமத் குகை, வெறும் ஒரு குகை அல்ல. அது, ஒரு இயற்கையான கால இயந்திரம் (Time Capsule). இதன் இருண்ட மூலைகளில், விஞ்ஞானிகள் ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பூமி எப்படி இருந்தது தெரியுமா? அப்போது, கென்டக்கி உட்பட, வட அமெரிக்காவின் பெரும் பகுதி, ஒரு பிரம்மாண்டமான உள்நாட்டுக் கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. அந்தக் கடலில், டைனோசர்கள் தோன்றுவதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, சுறாக்கள் ராஜாவாக வலம் வந்தன.
அந்தக் கடல்தான், இன்று நமக்கு இந்த இரண்டு கடல் அரக்கர்களின் கதையைச் சொல்லியிருக்கிறது.
முதலாவதாக கண்டறியப்பட்ட கடல் அரக்கன் பெயர், ட்ரோக்ளோக்ளாடோடஸ் டிரிம்ப்ளி(Troglocladodus trimblei)
சுமார் 3.5 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சுறா, முட்கரண்டி போன்ற பற்களைக் கொண்டிருந்தது. இதன் மூலம், மென்மையான உடலைக் கொண்ட உயிரினங்களை வேட்டையாடியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தச் சுறாவின் புதைபடிவத்தை முதன்முதலில் கண்டுபிடித்த, பார்க்லே டிரிம்பிள் என்ற பூங்கா காவலரின் நினைவாக, இதற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இரணடாவதாக கண்டறியப்பட்ட கடல் அரக்கன் பெயர், க்ளிக்மேனியஸ் கேர்ஃபோரம் (Glikmanius careforum)
இது, முதல் சுறாவை விட மிகவும் ஆக்ரோஷமான வேட்டையாடும் உயிரினம். இதன் தாடைகள் மிகவும் வலுவானவை. அழிந்துபோன கணவாய் மீன்களின் கடினமான ஓடுகளைக் கூட நொறுக்கித் தின்னும் அளவிற்கு இதன் கடி சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது.
இந்த மர்மம் எப்படிப் பாதுகாக்கப்பட்டது?
காலப்போக்கில், கண்டங்கள் நகர்ந்து, அந்தக் கடல் மறைந்து போனது. ஆனால், மாமத் குகையின் சுண்ணாம்புப் பாறைகள், அந்தக் கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகளை, புதைபடிவங்களாக, மிக மிக பத்திரமாகப் பாதுகாத்து வந்துள்ளன. குகையின் நிலையான தட்பவெப்பநிலை, குறைந்த ஆக்சிஜன் சூழல் ஆகியவை, இந்த 325 மில்லியன் ஆண்டு காலப் புதையலை, எந்தச் சேதமும் இல்லாமல் அப்படியே பாதுகாக்க உதவியுள்ளன.
இந்த இரண்டு சுறாக்கள் மட்டுமல்ல, இதுவரை 70-க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் இந்தக் குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
“இந்தப் புதைபடிவங்கள், ஆரம்பகால சுறாக்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் அறிந்திருந்த பல விஷயங்களையே கேள்விக்குள்ளாக்குகின்றன,” என்கிறார் தேசிய பூங்கா சேவையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் வின்சென்ட் சாண்டுசி(Dr. Vincent Santucci).
இந்தக் கண்டுபிடிப்புகள், டைனோசர்களின் காலத்திற்கு முன்பே, நமது பூமி எவ்வளவு வளமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டிருந்தது என்பதற்கான ஒரு சான்று. மாமத் குகை போன்ற இயற்கையான கால இயந்திரங்கள், நமது கிரகத்தின் தொலைதூர கடந்த காலத்தின் மர்மங்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் திறவுகோல்களாகும். இந்த இருண்ட குகைக்குள், இன்னும் என்னென்ன மர்மங்கள் புதைந்து கிடக்கின்றனவோ! என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.