உக்ரைன்மீது வலுக்கட்டாயமாகப் போரைத் திணித்துள்ள ரஷ்யாமீது 30 நாடுகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.
USSR என்கிற ஒருதாய் வயிற்றுப்பிள்ளையாக இருந்த ரஷ்யாவும் உக்ரைனும் தற்போது பரம எதிரிகளாக மாறி, ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.
இந்த சகோதர யுத்தத்தில், சிறிய நாடான உக்ரைனுக்கு ஆதரவாகப் பல நாடுகள் அணிதிரண்டுள்ளன. அந்த நாடுகள் நேரடியாகப் போரில் ஈடுபடாமல், மறைமுகமாக ரஷ்யாவைத் தாக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் 30 நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடைகளையும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
போர் தொடுப்பதற்கு முன்னரே ரஷ்யாமீது அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. என்றாலும், அந்தத் தடைகளால் ரஷ்யாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது அமெரிக்காவைப் பின்பற்றி பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், கனடா என அடுத்தடுத்து 30க்கும் மேற்பட்ட நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடைவிதித்துள்ளன.
உலகப் பொருளாதாரத்தில் பாதியை இந்த 30 நாடுகள் கொண்டுள்ளன. இந்த நாடுகள் விதித்துள்ள தடையால் பொருளாதாரம், நிதி ரீதியாக ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நிதி அமைப்பிலிருந்தும் புதின் அரசு வெளியேற்றப்பட்டுவிட்டது என்கிறார் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர்.
மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய நிறுவனங்களின் சொத்துகளை முடக்கக் கூட்டுப்பணிக் குழுவை ஏற்படுத்த முடிவுசெய்துள்ளனர்.
இதனால், ரஷ்யா மீதான பிடி இறுகியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.