தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 210 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கட்டையங்காடு கிராமத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசுக் காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அந்த காரில் தலா 2 கிலோ எடையுள்ள 105 கஞ்சா பொட்டலங்கள் 7 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த சீனிவாசபெருமாள், முத்துமாலை இருவரையும் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.