அதீத நினைவாற்றலால் 2 வயதில் டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் ஒரு சிறுவன்… யார் அவர் அப்படி என்ன செய்தார் என கேள்வி எழுகிறதா .விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் – சத்யா தம்பதியின் 2 வயது மகன் ஆத்விக்குமார். இவன் தனது 1 வயது முதல் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நினைவில் வைத்து மீண்டும் நினைவுபடுத்திக் கூறும் திறமை கொண்டவனாக இருந்துள்ளான்.
இதைக் கண்ட சிறுவனின் பெற்றோர் அவனின் நினைவாற்றலை மேம்படுத்தும் விதமாக 1 வயது முதல் அறிவு சார்ந்த தகவல்களை வரைபடமாக காட்டி அதனை நினைவு கொள்ளும் பயிற்சியை வழங்கியுள்ளனர். இதனால் பல்வேறு வரைபடங்களில் உள்ள தகவல்களை எப்போது கேட்டாலும் சொல்லும் திறன் கொண்டவனாக மாறியதோடு ஒன்றரை வயது முதல் 2 வயது வரை 6 மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளான்.இந்நிலையில், கடந்த மாதம் 100 வகையான படங்கள், 5 அரசியல் தலைவர்கள், 6 தேசிய தலைவர்கள், 25 வாகனங்களின் லோகோக்கள், 10 நல்ல பழக்கங்கள், 5 சுதந்திர போராட்ட வீரர்கள், 28 விலங்குகள், 15 பறவைகள், 30 உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பெயர்களை 3 நிமிடம் 32 வினாடிகளில் கூறி சாதனை படைத்தார்.
இதற்காக ஜாக்கி புக் ஆப் டேலண்ட் சான்றிதழ் பெற்றுள்ளார்.சிறு வயதில் அதீத நினைவாற்றல் கொண்ட இச்சிறுவனின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக ரிக்கார்டு பிரேக்கிங் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இச்சிறுவனின் சாதனை கேட்டு வியப்படைந்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.