2025ஆம் ஆண்டுக்கான கல்லூரி சேர்க்கை நடவடிக்கைகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதற்காக மாணவர்களும் பெற்றோர்களும் சில முக்கியமான தகவல்களையும் ஆவணங்களையும் இப்போது தயார் செய்து வைத்துக்கொள்வது, கடைசி நேரத்தில் ஏற்படும் அலைச்சலையும் குழப்பங்களையும் தவிர்க்க உதவும்.
மே மாதம் 9ஆம் தேதி +2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன. அதற்குமுன்பாகவே மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் புகைப்படங் 10-ம், ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களில் 4-ம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் சேமித்து வைத்திருப்பது பாதுகாப்பானது.
மாணவர்களின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட எந்தவொரு வங்கியிலும் சேமிப்பு கணக்கு ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும். வங்கிக்கணக்கு துவங்க பான் கார்டு தேவைப்படும். இதுவரை பான் கார்டு எடுக்காதவர்கள் இந்நேரத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் அல்லது தொலைந்துவிட்டவர்கள், தங்கள் பகுதியிலுள்ள பஞ்சாயத்து, நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் புதிய பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோல் சாதி சான்றிதழும் இப்போது QR குறியீடு (QR code) உடன் கூடிய டிஜிட்டல் வடிவில் வழங்கப்படுகிறது. அரசு இடஒதுக்கீட்டில் சேர்க்கை மற்றும் கல்வி உதவித்தொகைக்கு இது அவசியம். அதனை பெறத் தேவையானவர்கள் இப்போது செயல்படுவது சிறந்தது.
பிறப்பிட சான்றிதழும் தற்போதைய முறைப்படி டிஜிட்டல் வடிவில் QR குறியீடு கொண்டதாக வழங்கப்படுகிறது. அதனை தேவையான மாணவர்கள் இப்போது தயாராக வைத்துக்கொள்வது நல்லது.
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெற தகுதி உள்ளவர்கள் அதனை எளிதில் பெறலாம். இது பெற்றவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.
வருமான சான்றிதழும் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுகளில் பயன்படும். இது தேவையான மாணவர்கள் இப்போது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ்களும் சுமார் 1 முதல் 2 வாரத்திற்குள் கிடைக்கும்.
மருத்துவப் படிப்புகளுக்கு (MBBS/BDS) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் வைத்திருக்க வேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவைப்படும்.
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன. மாணவர்கள் குடும்ப அட்டையில் சேர்க்கப்படாமல் இருந்தால், தற்போது சேர்த்து வைக்க வேண்டும்.
மாணவர்களின் பள்ளி முடிவு சான்று, மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் குறைந்தது 10 ஜெராக்ஸ் நகல்களாக எடுத்து வைக்கவும். மேலும், அனைத்தையும் PDF வடிவில் கணிப்பொறியில் சேமித்து வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
+2 முடிவுகள் வருவதற்குமுன்பாகவே மாணவரும் பெற்றோர்களும் சேர்க்க விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை முடிவெடுத்து வைத்திருப்பது நல்லது.
மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பெற்றோர்களின் பெயர்கள் ஆகியவை குடும்ப அட்டை, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஒரே மாதிரி, எழுத்துப்பிழையின்றி உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்திக்கொள்வது அவசியம்.
கல்லூரி சேர்க்கை பற்றிய அறிவிப்புகளை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வழியாக தொடர்ந்து அறிந்துகொள்வது முக்கியம். தற்போது பெரும்பாலான கல்லூரிகளுக்கு சேர்க்கை ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறுகிறது.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இப்போது எவ்வாறு செயல்படுவது என்பதை திட்டமிட்டு, தேவையான ஆவணங்களை சீரமைத்து வைத்துக்கொள்வது, எதிர்கால கல்விச் செலுத்தலில் பெரிய முன்னேற்றமாக அமையும்.