Sunday, February 15, 2026

தினமும் 2 கப் காபி.. மூளைக்கு இவ்வளவு நன்மையா? மருத்துவர்கள் சொல்லும் சீக்ரெட்!

காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் பலருக்குப் பொழுதே விடியும். “காபி உடம்புக்குக் கெடுதல்” என்று சொல்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், காபி குடிப்பது மூளைக்கு நல்லது என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக, தினமும் 2 முதல் 3 கப் காபி குடிப்பவர்களுக்கு, வயதான காலத்தில் வரும் ஞாபக மறதி நோயான ‘டிமென்ஷியா’ (Dementia) வரும் ஆபத்து 18 சதவீதம் குறைவாக இருக்கிறதாம். இதுவே டீ குடிப்பவர்களாக இருந்தால், ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் டீ குடித்தாலே போதும், மூளை சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம், இது சாதாரண காபிக்கு (Caffeinated Coffee) மட்டும்தான் பொருந்தும். கஃபைன் இல்லாத ‘டிகாஃப்’ (Decaf) காபி குடித்தால் எந்தப் பலனும் இல்லை.

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் மஞ்சரி திரிபாதி இதுபற்றிச் சொல்லும்போது, “மதியம் 2 மணிக்கு முன்னதாகக் காபி குடிப்பது நல்லது. இது பார்கின்சன்ஸ் மற்றும் டிமென்ஷியா போன்ற மூளை தொடர்பான நோய்களைத் தடுக்க உதவும்,” என்று கூறியுள்ளார். ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல, ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் குடித்தால் தூக்கமின்மை, படபடப்பு போன்ற பிரச்சினைகள் வரலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை டீ குடிப்பவர்கள் தான் அதிகம். க்ரீன் டீ குடிப்பதும் ஞாபக சக்திக்கு நல்லது என்று ஜப்பான் மற்றும் சீன ஆய்வுகள் சொல்கின்றன. குர்கான் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் பிரவீன் குப்தா கூறும்போது, “வயதானவர்கள் 1 முதல் 3 கப் வரை டீ அல்லது காபி குடிக்கலாம். ஆனால் பிபி (BP), அசிடிட்டி, இதயப் படபடப்பு உள்ளவர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது,” என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே காபி பிரியர்களே! இனிமேல் காபி குடிக்கும்போது குற்ற உணர்ச்சி வேண்டாம். அளவோடு குடிங்க, மூளையை வளமாக்குங்க!

Related News

Latest News