தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இன்னும் தேர்தலையே சந்திக்கவில்லை, அதற்குள் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரம் தமிழகத்தையே அதிர வைத்திருக்கிறது. “தவெக-வுக்குத் தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான ஓட்டுகள் இருக்கிறது” என்று அவர் பேசியிருப்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, இதற்கென ஒரு விசித்திரமான கணக்கை முன்வைக்கிறார். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 25 லட்சம் ரேஷன் கார்டுகள் இருப்பதாகவும், ஒரு குடும்பத்திற்கு ஒரு ஓட்டு என்று கணக்கு வைத்தாலே தவெக-வுக்கு 2 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைப்பது உறுதி என்றும் அவர் மார்தட்டியுள்ளார். குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக வீடுகளுக்குள்ளும் தவெக-வின் ஆதரவாளர்கள் ஒளிந்திருக்கிறார்கள் என்பதுதான் இவரது புதுமையான லாஜிக்.
ஆனால், இந்தக் கணக்குதான் இப்போது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேலிக்குள்ளாகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக மிகப்பெரிய கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டே மொத்தம் 2 கோடியே 9 லட்சம் வாக்குகளைத்தான் பெற்றது. திமுக தனித்துப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 74 லட்சம் மட்டுமே. அதேபோல் அதிமுக ஒரு கோடியே 53 லட்சம் வாக்குகளைப் பெற்றது. தமிழகத்தின் இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளே இதுவரை தனித்துப் போட்டியிட்டு 2 கோடி வாக்குகளைத் தொட்டது கிடையாது.
இந்தச் சூழலில், இதுவரை எந்தக் கூட்டணியும் அமையாத நிலையில், களத்தில் வலுவான கட்டமைப்பு இல்லாதபோதும் ஆதவ் அர்ஜுனா எதை வைத்து இப்படிப் பேசுகிறார் என்ற கேள்வி எழுகிறது. முதலில் தவெக-வுக்கு 23 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறிய ஆதவ் அர்ஜுனா, பிறகு அதை 26 சதவீதமாக மாற்றினார். இப்போது திடீரென 2 கோடி ஓட்டுகள் என்று புது புது டேட்டாக்களை அள்ளி விடுவதால், இவருக்கு “டேட்டா அர்ஜுனா” என்ற பெயரே இணையதளத்தில் உருவாகிவிட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளில் மற்ற கட்சிகள் காட்டிய வேகத்தை விஜய் காட்டவில்லை என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இத்தனை கோடி ஓட்டுகள் இருப்பதாகக் கூறுவது வெறும் பகல் கனவா அல்லது ரகசிய வியூகமா? தேர்தலுக்கு முன்பே திமுகவை தாண்டிவிட்டோம் என்று கூறும் ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் கணக்கு நிஜமாகுமா அல்லது தேர்தலுக்குப் பின் புஸ்வாணமாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
