ரேஷன் திட்டத்தில் தகுதியற்றவர்களை நீக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உண்மையான ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் சென்றடைவதை அரசு உறுதி செய்கிறது.
ஒவ்வொரு மாதமும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அதிக வருமானம் பெறுபவர்கள், நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த முறைகேடுகள் தடுக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 5 மாதங்களில் 2.25 கோடி தகுதியற்ற பயனாளிகளின் பெயர்களை ரேஷன் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. இதை உணவுத்துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். மாநில அரசுகளும் தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலில் சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் போது இறந்தவர்களின் பெயர்களிலும் ரேஷன் பெற்றுவந்த குடும்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பெயர்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. மேலும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், அதிக வருமானம் பெற்றவர்கள் போன்றவர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 19 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். சுமார் 5 லட்சம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், மாநிலங்கள் இன்னும் 79 லட்சம் புதிய பயனாளிகளை அடையாளம் காணும் வாய்ப்பும் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் ரேஷன் திட்டம் உண்மையான ஏழைகளுக்கு மட்டுமே சென்றடைய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
