மத்திய அரசு மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவை இணைக்கும் வகையில் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஹைதராபாத் – புனே மற்றும் செகந்திராபாத் – நந்தேத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளன. இதனால் இந்த வழித்தடங்களில் பயண நேரம் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹைதராபாத் நகரில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிராவின் புனே மற்றும் நந்தேத் பகுதிகளுக்கு ஹைதராபாத்தில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, செகந்திராபாத் – புனே இடையே இயங்கி வந்த சதாப்தி ரயிலுக்கு பதிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. சதாப்தி ரயிலில் பயணித்தால் சுமார் 8 மணி 30 நிமிடங்கள் எடுத்தது. மேலும் அது செவ்வாய்க்கிழமையை தவிர்த்து வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே, குறைவான நிலையங்களில் நிறுத்தங்களுடன் இயக்கப்பட்டது. சதாப்தி ரயிலில் ஏசி சிறப்பு வகுப்புகள், 9 ஏசி கார் சேர் வகுப்புகள் போன்ற வசதிகள் இருந்தன.
ஏற்கனவே செகந்திராபாத் – விசாகப்பட்டினம், செகந்திராபாத் – திருப்பதி, கட்சிகுடா – எஸ்வந்த்பூர் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது கூடுதல் ரயில்கள் அறிமுகமாகியுள்ளதால், தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மொத்தம் ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.