குஜராத்தில் 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

குஜராத் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் சுமார் 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனிஷா வக்கீல், 2026 ஜனவரி மாத நிலவரப்படி மாநிலத்தில் 1.69 லட்சம் குழந்தைகள் சராசரியை விட குறைவான உடல் எடை கொண்டவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், 36,805 குழந்தைகள் மிகவும் கடுமையான உடல் எடை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதன் மூலம், மாநிலத்தில் மொத்தமாக 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய குஜராத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,762 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனிஷா வக்கீல் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News