அடுத்தடுத்த தோல்விகளால் உடைந்து போயிருக்கும் சென்னை அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி டெல்லி கேபிடல்ஸை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
அக்சர் படேல் தலைமையில் டெல்லி 2 வெற்றிகளை சுவைத்துள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெற டெல்லியும், ஹாட்ரிக் தோல்வியினைத் தடுக்க சென்னையும் கடுமையாகப் போராடும். எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையலாம்.
இந்தநிலையில் மும்பை அணிக்காக, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் மகாராஷ்டிரா மாநிலத்தின், 17 வயது ஓபனர் ஆயுஷ் மத்ரேவை, சென்னை அணி Trialsக்காக அழைத்துள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள BCCIயின், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் இருக்கிறார்.
விரைவில் நாவலூரில் இருக்கும் CSK அகாடமியில்,Trialsக்காக ஆயுஷ் இணைவார் என தெரிகிறது. BCCI விதிப்படி வீரர் ஒருவர் காயமடைந்தாலோ அல்லது பங்குபெற முடியாமல் போனாலோ தான், அவருக்குப்பதில் மாற்று வீரரை அணியில் சேர்க்க முடியும். ஆனால் CSK CEO காசி விஸ்வநாதன், ” எங்களது வீரர்கள் யாருக்கும் காயம் இல்லை.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல எந்தவொரு வீரரும் இடையில் விலகுவது போலவும் தெரியவில்லை. இதனால் ஆயுஷ் மத்ரேவை இவ்வளவு அவசரமாக எதற்கு அழைத்தார்கள்?, என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை அணிக்காக பேட்டிங்கில் கலக்கிவரும் ஆயுஷ், 2024-2025 விஜய் ஹசாரே தொடரில், 2 சதம் 1 அரைசதத்துடன் 458 ரன்கள் எடுத்துள்ளார்.
இதேபோல ரஞ்சி தொடரிலும் 471 ரன்கள் குவித்திருக்கிறார். ஆயுஷின் அதிகபட்ச ஸ்கோர் 176 ரன்கள் ஆகும். அவரது அசத்தலான ஆட்டம் தோனியை வெகுவாகக் கவர்ந்து விட்டதாம். இதனால் Trailsல் நன்றாக பெர்பார்ம் செய்தால், ஆயுஷை சென்னை தொடக்க வீரராகக் களமிறக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
விரைவில் ஆயுஷ் மத்ரே குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.