அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஞானசேகரன் மாணவியை வீடியோ எடுத்து மிரட்டியதாக காவல் துறை FIR இல் தெரியவந்துள்ளது.
அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர், இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், அவர்களை மிரட்டி அச்சுறுத்தியதுடன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக அவர் தப்பியோட முயன்ற போது ஞானசேகரனுக்கு இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாவுகட்டு போடப்பட்டது.
ஞானசேகரன் மீது கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்று மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், அவர் மாணவியை மிரட்டி வீடியோ எடுத்ததாகவும், அதை மாணவியின் தந்தையின் செல்போனுக்கு அனுப்பப்போவதாக கூறி பாலியல் கொடுமை செய்ததாகவும், காவல் துறை எஃப்.ஐ.ஆர் மூலம் தெரியவந்துள்ளது.