விருதுநகரிலிருந்து திண்டுக்கல் வழியாக நாமக்கல்லுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நிலக்கோட்டை 4 வழிச்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி போலீஸார் சோதனை செய்தனர். அதில், 14, ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து லாரி ஓட்டி வந்த மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய கர்ணன், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.