13.22 ஏக்கர் நிலம் தயார்? புதிய தலைமைச் செயலகத் திட்டத்தில் திருப்பம்!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மீனவ சமுதாயத்தினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதால், மாற்று இடங்களைத் தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சென்னையின் முக்கியப் போக்குவரத்து மையமான பல்லவன் இல்ல வளாகம் மாற்று இடமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், தற்போது பெருநகர போக்குவரத்துக் கழகம் (MTC), மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களும், இரண்டு பேருந்துப் பணிமனைகளும் செயல்பட்டு வருகின்றன. எனினும், பல்லவன் இல்லத்தைத் தேர்வு செய்வது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்லவன் இல்லம் அரசுக்குச் சொந்தமான இடம் என்பதால், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுதல் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும். மேலும், பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ வசதிகளால் தலைமைச் செயலகத்திற்கு வருவோர் எளிதாகப் பயணிக்கலாம்.

இந்த இடம் தேர்வு செய்யப்பட்டால், போக்குவரத்துக் கழக அலுவலகங்களை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படலாம்.

முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள புதிய தலைமைச் செயலகத் திட்டத்திற்கு ரூ.1,200 கோடி செலவில் 20 லட்சம் சதுர அடி கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், பல்லவன் இல்லம் தேர்வாகுமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே உறுதியாகும்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News