திருமணத்தை மறைத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அசாம் மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்த நிலையில், பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பிற அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் உள்ளடக்கும் என்று முதலமைச்சர் ஹிமந்தா சர்மா தெரிவித்துள்ளார். இருப்பினும், பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆறாவது அட்டவணையின்கீழ் உள்ள பகுதிகள் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய திருமணத்தை மறைத்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சட்டவிரோத பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவும் இதில் அடங்கும்.
