தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும் விஞ்ஞானியுமான வி.ஆர். துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தென் உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால், நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.
ஏப்ரல் 30, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 1ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மே 2ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை இருக்கலாம். மே 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், மே 4ம் தேதி உள் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 3ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸும் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
