எலக்ட்ரிக் டூவீலர், ஆட்டோ, பஸ் வரிசையில் உலகின் முதல் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் யாரா நிறுவனம் மணிக்கு 27. 78 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலை வடிவமைத்துள்ளது. யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல் யாரா நார்கே ஏஎஸ் என்னும் உர நிறுவனத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
80 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் உள்ள இந்தக் கப்பல் 3 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் எடையுள்ள பொருட்களைக் கொண்டுசெல்லும் கொள்ளளவு உடையது.
ருமேனிய நாட்டுக் கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் 4 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. இதற்கானத் தொழில்நுட்பத்தை நார்வே நிறுவனமான கிங்ஸ்பெர்க் மேரிடைம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்து நிறுவனம் அதற்கான பேட்டரியை வழங்கியது.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல் தனது 7 மணி நேரக் கன்னிப் பயணத்தை சில மாதங்களுக்குமுன்பு நிறைவுசெய்து நார்வே நாட்டை வந்தடைந்தது.
உலகின் 90 சதவிகிதப் பொருட்கள் கப்பல் மூலமே கொண்டுசெல்லப்படுகின்றன. கப்பல் போக்குவரத்துமூலம் ஓராண்டுக்கு 1 பில்லியன் டாலர்களுக்குமேல் கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. இதன் மூலம் 2 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதம் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இந்த எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல், ஓராண்டுக்கு டீசலில் இயங்கும் 40 ஆயிரம் பயணங்களைக் குறைக்கும்.
பாரிஸ் வெப்பநிலை உடன்படிக்கை இலக்குகளை அடையும்பொருட்டு சர்வதேசக் கடல்சார் அமைப்பு 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை 50 சதவிகிதத்துக்குள்ளாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.