அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒவ்வொரு நாளும் அள்ளி வீசும் அறிவிப்புகள் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது வீடில்லாத மக்களை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்துவெளியேற்றப் போவதாக அவர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் இதனை குறிப்பிட்டிருக்கிறார். தலைநகர் வாஷிங்டனில் இருந்து வீடற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு நகரின் வெளியே தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 800க்கும் அதிகமான தேசிய காவல் படையினரை வாஷிங்டனில் நிலைநிறுத்த அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இருப்பினும் ட்ரம்பின் இந்த முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போது காவல் படையினரின் செயல் திட்டங்கள் மற்றும் எண்ணிக்கை ஆகியவை ஆய்வுசெய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வீடற்றவர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ட்ரம்ப் எந்த சட்ட அதிகாரத்தை பயன்படுத்துவார் என்பதும் தெரியவில்லை.
சுமார் 7 லட்சம் பேர் வசிக்கும் தலைநகர் வாஷிங்டன் DC-யில் ஒவ்வொரு இரவும் சுமார் 3,782 பேர் வீடு இல்லாமல் வெளியே தங்குவதாக, வாஷிங்டன்னின் வீடற்றவர்கள் எண்ணிக்கையை குறைக்க உதவும் சமூக அமைப்பு கூறுகிறது. மேலும் வாஷிங்டன் DC, வன்முறைக் கும்பல்கள், குற்றவாளிகள் மற்றும் வீடற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவர்களை தலைநகரில் இருந்து வெளியேற்றப் போவதாக அவர் அறிவித்து இருப்பது அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.