சென்னையில் “QR கோடு” ஸ்டிக்கர்களை டீக்கடைகளில் ஒட்டி, வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை நூதன முறையில் திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கந்தன்சாவடியில், டீக்கடை நடத்தி வரும் துரை என்பவர், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வழியாக பணம் செலுத்த வசதிக்காக, “போன் பே” வைத்துள்ளார்.
இதற்கான, “QR கோடு” ஸ்டிக்கர் கடையில் ஒட்டியுள்ளார்.
கடந்த இரு தினங்களாக, வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம், துரையின் வங்கி கணக்கில் சேரவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில், கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை துரைப்பாக்கம் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, இரண்டு பேர், கடை பூட்டிய பிறகு, கடையில் இருந்த “QR கோடு” ஸ்டிக்கரை மறைத்து, அதே போன்ற மற்றொரு “QR கோடு” ஸ்டிக்கர் ஒட்டி, பணத்தை வெரொரு வங்கி கணக்கின் மூலம் பெற்றுவந்தது தெரிந்தது.
இதனையடுத்து, வல்லரசு, ராபர்ட் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதில் வல்லரசு என்பவரின் நண்பரான சீனிவாசன் வங்கி கணக்கின் “QR கோடு” ஸ்டிக்கரை கடைகளின் வெளியே ஒட்டி, பணத்தை சுருட்டி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து எட்டு போலி “QR கோடு” ஸ்டிக்கர் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கைதான இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.