நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

259

நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத வைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வுக்கு முன்பாக மிக கடுமையான முறையில் மாணவ, மாணவிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம், சோதனை செய்த பெண் அலுவலர்கள், மாணவிகளின் உள்ளாடையை அகற்ற நிர்பந்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியர் தங்கள் உள்ளாடைகளை அகற்றிய பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து, மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள் என்றும், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கல்வித்துறை அமைச்சர் பிந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது. தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்தக் குழுவினர் கொல்லம் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.