உங்க ஊர்ல மழை பெய்ததா..?

216
rain
Advertisement

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

தாம்பரம், சேலையூர், விமானநிலையம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், போரூர், கே.கே.நகர், அண்ணாசாலை, ராயப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொடூங்கையூர், எண்ணூர் போன்ற மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Advertisement

கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

சென்னையில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்றைய மழை சற்று மகிழ்ச்சியை தந்தது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் காலை 6 மணி முதலே கனமழை பெய்தது.

நேற்று செங்கல்பட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று மதுராந்தகம், மேல்மருவத்தூர், ராமாபுரம், அச்சிறுபாக்கம், ஒரத்தி, ஆத்தூர், செய்யூர், சித்தாமூர், சூனாம்பேடு இடைக்கழிநாடு மற்றும் படாளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக அதிகாலை 3 மணி முதலே கனமழை பெய்தது. திருச்சி விமானநிலையம், பொன்மலை, மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டித் தீர்த்தது.