பாம்பு பிடிக்க தமிழக அரசு லைசென்ஸ்

369
Advertisement

இருளர் சமூக மக்கள் பாம்பு பிடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் இருளர் சமூக மக்கள் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இருளர்கள் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கம் சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டுப் பகுதியில் இயங்கிவருகிறது.

இருளர் சமூக மக்கள் பாம்புகளைப் பிடித்து அதிலிருந்து விஷத்தை எடுத்து ஜாடியில் அடைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருகிறார்கள். இருளர் சமூக மக்களின் இந்த மருந்து உலக அளவில் புகழ்பெற்றது.

விஷமுறிவு மருந்துகள், பாம்புக் கடிக்கு மருந்துகள் தயாரிப்பதற்காக விஷமுள்ள நாகம், கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைப் பாம்பு இனப் பாம்புகளைப் பிடித்து மருந்து நிறுவனங்களுக்கு வழங்கிவந்தனர். ஒரு கிராம் கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் 60 ஆயிரம் ரூபாய்க்கும், நாகப்பாம்பு விஷம் ஒரு கிராம் 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கான அனுமதி கிடைக்காததால் விஷமுறிவு மருந்து தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் ஆயிரக்கணக்கான இருளர் சமூக மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருந்தது.

தற்போது இருளர் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இருளர்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.