தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

167

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை 100-ஐ தாண்டிய நிலையில், தொற்றுப்பதிப்பு படிப்படியாக 100-க்கு கீழ் குறைந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 90 ஆக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு, நேற்று 144ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 48-ல் இருந்து 82ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 29 பேருக்கும், கோவையில் 7 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 862-ல் இருந்து 927ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவில் இருந்து, 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் தமிழகத்தில் நேற்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.