வேளாண்மை பட்ஜெட்டில் உரையாற்றிய அவர், நம் மாநில மரமான பனை மரம், அனைத்து பாகங்களையும் மானுடத்திற்கு கொடையாய் அளிக்கிறது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பனைமரத்தின் பரப்பு வெகுவாகக் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பனைமரங்களை பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏரிக்கரைகளிலும், சாலையோரங்களிலும் பனைமரங்களை வளர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்துடன் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சி நிலையத்தில் பனைமரம் தொடர்பான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறினார்.
தரமான பனை வெல்லம் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும் என்றும் பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்திட மானியமும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக் கூட்டுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பனை மரத்தினை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறிய அமைச்சர், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், பனைமரங்களை வெட்ட நேரிட்டால், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்படும் என தெரிவித்தார்.
பனை உற்பத்தியை பெருக்க பனை மேம்பாட்டு இயக்கம் 3 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.