ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிக அளவிலான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, கடந்த ஆண்டில் 5.35 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
தற்போது மேட்டூர் அணையில் ஏறக்குறைய 69.8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. வருகிற 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், தெற்மேற்கு பருவமழை தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக, முன் கூட்டியே தண்ணீர் திறக்க அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதிகரிக்கும் பட்சத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 5ஆம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார். நீர்வழித்தடங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் விவரங்களை அவர் கேட்டறிகிறார். இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திட்டமிட்டபடி தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி காலம் தொடங்கி அதற்கான பணிகளை விவசாயிகள் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், முதலமைச்சரின் டெல்டா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.