மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பாடகர்

401

கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நாள் முதல், காக்க காக்க உள்ளிட்ட தமிழ் படங்களில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கேரளாவை பூர்வீமகமாகக் கொண்ட இவர் டெல்லியில் பிறந்தார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.கே, திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

53 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பின்னணி பாடகர் கே.கே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கே.கே பாடிய பாடல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்தவை என்றும், அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கே.கே பாடல்கள் மூலம் அவரை எப்போதும் நினைவில் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பின்னணி பாடகர் கே.கே மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேகேவின் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அவரது பாடல்களை பதிவிட்டு, இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.