மழைக்காலம் துவங்கி விட்டதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தாலும், அதனுடன் பலருக்கும் இருமல், சளி, காய்ச்சலும் சேர்ந்தே வந்து விடுகிறது.
காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம், தேங்கிய நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் என மழைக்காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது போதாதென லேசான மழையில் நனைந்து விட்டாலே தொண்டை கட்டுவதும், சளி பிடிப்பதுமாக உள்ளதே என கவலை படும் மக்களும் உள்ளனர். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கான இந்த கஷாயப் பொடியை செய்து வைத்துக்கொண்டால், தேவையான நேரத்தில் உடனடியாக போட்டு குடிக்க உதவியாக இருக்கும்.
மல்லி, மிளகு, சோம்பு மற்றும் சீரகத்தை நன்றாக அரைத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். தினமும், ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு கஷாய பொடியை கலந்து வடிகட்டி குடித்து வந்தால், மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றை தவிர்க்க முடியும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.