சத்தியம் தொலைக்காட்சி மீது மர்ம நபர் கொடூர தாக்குதல் :
சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மர்ம நபர் ஒருவன் பயங்கரமான ஆயுதத்தோடு திடீரென தாக்குதல் நடத்தி, ஊழியர்களை மிரட்டி, வெறியாட்டம் ஆடினான்.
தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை மிரட்டல் :
சத்தியம் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக மர்மநபர் ஒருவன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தான்.
இந்த நிலையில், சத்தியம் தொலைக்காட்சி தலைமை அலுலகத்திற்குள், நேற்று மாலை 7 மணி அளவில் காரில் மர்ம நபர் ஒருவன் வந்தான்.
பட்டாகத்தி போன்ற கூர்மையான வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்த அந்த நபர், திடீரென சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்களை மிரட்டினான்.
மர்ம நபரின் வெறியாட்டம் :
மர்ம நபரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சற்றும் யோசிக்காமல் ஆயுதம் கொண்டு ஊழியர்களை தாக்கினான்.
அலுவலக வரவேற்பரையில் அமைக்கப்பட்டிருந்த மேஜை கண்ணாடி, பெரிய தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி உள்ளிட்ட பொருட்களை ஆயுதம் கொண்டு தாக்கினான்.
இதையடுத்து, கதவின் கண்ணாடியை உடைத்து அலுவலக அறைக்குள் நுழைந்த அந்த நபர், நிர்வாக மேலாளர் இருந்த அறைக்கதவையும் உடைத்து கொலை மிரட்டல் விடுத்தான். மேலும் தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கினான்.
இதில் சத்தியம் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.
விரைந்து வந்த காவல்துறை :
சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, சென்னை ராயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்லும்போது, செல்போனில் வீடியோ எடுத்த சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்களை தாக்க முயன்றான்.
தாக்குதல் நடத்திய நபர் யார்..?
சத்தியம் தொலைக்காட்சியில் தாக்குதல் நடத்திய நபர், கோவை மாவட்டம் உப்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தாக்குதலுக்கு பயன்படுத்திய கூர்மையான வாள் உள்ளிட்ட ஆயுதங்களையும், அந்த நபர் வந்த காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ராஜேஷ்குமாரை, ராயபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளான சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவ பிரசாத் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். சத்தியம் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
கோழைத்தனமான இதுபோன்ற வெறித்தனம் மிக்கவர்களின் அச்சுறுத்தல்களுக்கு சத்தியம் செய்தித் தொலைக்காட்சி ஒருபோதும் அடிபணியாது. வழக்கம் போல், உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும், தொடர்ந்து உரக்கச் சொல்வோம் என சத்தியம் தொலைக்காட்சி உறுதியுடன் நேயர்களுக்கு சொல்லிக் கொள்கிறது.