இனி, ரேஷன் கடைகளிலேயே சமையல் கியாஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் விற்கப்பட்டு வருகிறது. சாதாரணமானவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை இந்தத் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் இன்னொரு புதுமையாக, 5 கிலோ எடைகொண்ட சமையல் சிலிண்டர்களை ரேஷன் கடைகள்மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. தற்போது 5 கிலோ சமையல் சிலிண்டர்கள் பெட்ரோல் பங்க்குகள்மூலம் சந்தை விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருமணமாகாதோர், தனியாக வசிப்போர், அவரசத் தேவைக்குப் பயன்படுத்துவோர் என்று பல்வேறு தரப்பினருக்கும் இந்த 5 கிலோ சிலிண்டர் விற்பனை மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தை ரேஷன் கடைகள்மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை 2 ஆண்டுகளுக்கு முன்பே வைக்கப்பட்டது. பரிசீலனையில் இருந்த இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், சிலிண்டர் விலை எவ்வளவு என்பது முடிவாகவில்லை. இதற்கான அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.