நேர்மையும், திறமையும் மிகுந்த I.A.S. அதிகாரியை 9 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாத பணியிடத்தில் வைத்திருப்பதற்கு சகாயம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் தலைமை செயலாளர் நிலையில் பணியாற்ற வேண்டிய 1990 பேட்ச் I.A.S. அதிகாரியான உமாசங்கர், ஒரு I.A.S. அதிகாரிக்கான பதவியே அல்லாத, சென்னை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையராக பணியாற்றி வருகிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
9 ஆண்டுகளாக அதிகாரம் இல்லாத தண்டனைக்கான பதவி என்று கருதக்கூடிய ஒரு பணியிடத்தில் கடந்த கால அரசு வைத்திருந்தது என சகாயம் தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சுடுகாடு கூரை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை துணிச்சலாக வெளி உலகத்திற்கு கொண்டுவந்தவர் உமாசங்கர் என்று குறிப்பிட்டுள்ள சகாயம், நேர்மையில் தீவிரம் காட்டக்கூடிய அதிகாரிகளை மட்டுப்படுத்தும் ஒரு உத்தியாகவே, இதை தான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.
எனவே ஸ்டாலின் தலைமையில் செயல்படக்கூடிய புதிய அரசு, உமாசங்கரின் அனுபவம், ஆற்றலுக்கு ஏற்ப, மக்களுக்கு பணியாற்றுகின்ற வகையில், பதவி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒரு அதிகாரி ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு எடுக்கிறார் என்பதற்காக, அவரை தண்டிக்கும் விதிமாக பணியிடங்கள் வழங்குகின்ற போக்கை, ஸ்டாலின் தலைமையிலான அரசாவது, எதிர்காலத்தில் தவிர்த்திட வேண்டும் என சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.