விரைவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு

54

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.   பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட, முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்தார். பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார்,  பீகாரில் புதிய கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, முதல் முறையாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார். அவருடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், நாட்டை முன்னெடுத்து செல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் பாஜகவை எதிர்ப்பது என்பது காங்கிரஸ் இன்றி சாத்தியமில்லை எனவும் கூறினார்.

பாஜகவை அகற்றி நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு சோனியா காந்தி அழைப்பு விடுப்பார் என்று கூறிய லாலு பிரசாத் யாதவ், அதில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வழி குறித்து ஆலோசிக்கப்படும் என்று சோனியா காந்தி உறுதியளித்தாக தெரிவித்தார்.

Advertisement