பெற்றோர் ஜாமினில் எடுக்காததால், சேலம் சிறையில் மதிய உணவுடன் பல்லியைப் பிடித்து சாப்பிட்ட சிறைக் கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச்சேர்ந்தவர் முகமது சதாம். (வயது 21). இவர் வழிப்பறி வழக்கு ஒன்றில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீசாரால் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
அவரை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இவர் மீது கந்திகுப்பம் காவல்நிலையத்திலும் வழிப்பறி வழக்கு உள்ளது.
இந்த நிலையில் மூன்றரை மாதங்களாகியும் முகமது சதாமை அவரது பெற்றோர் ஜாமினில் எடுக்கவும் இல்லையாம், பார்க்க வரவும் இல்லையாம். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று(வியாழக்கிழமை) பகல் 12 மணி அளவில் சிறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது சுவரில் சென்றுகொண்டிருந்த பல்லியைப் பாய்ந்துசென்று பிடித்த முகமது சதாம், அதனை சாப்பாட்டில் போட்டு நறுக்கென்று கடித்து சாப்பாட்டுடன் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார்.
இதுகுறித்து சக கைதிகள் விசாரித்தபோது பல்லியை சாப்பிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். தகவல் அறிந்து அங்குவந்த வார்டன்கள் அவரை சிறை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அவருக்கு முதலுதவிகள் அளிக்கப்பட்டன. பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். சிறைக்கைதி பல்லியை சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.