44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 775 வீரர், வீரங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட்டை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இன்று இந்திய அணி விளையாட, கறுப்பு நிற காய்ககளை தேர்வு செய்தார். மேடைக்கு வெள்ளை மற்றும் கறுப்பு நிற காய்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அதிலிருந்து கறுப்பு நிற காய்களை பிரதமர் மோடி தேர்வு செய்தார்.
விழாவில், பிரதமர் மோடிக்கு, மாமல்லபுரம் சிற்பக் கோவிலை பிரதிபலிக்கும் வகையில், நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நாட்டின் 75 நகரங்களில் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி முதலமைச்சர் மற்றும் பிரதமரிடம் வழங்கப்பட்டு, பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது.
இதைதொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 186 நாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அந்தந்த நாட்டு வீரர், வீராங்கணைகள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். அவர்களை, தமிழகத்தில் மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் வழிநடத்திச் சென்றனர்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் “நாமெல்லாம் ஒன்று” என்ற மையக்கருத்தை பிரதிபலிக்கும் வகையில், இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவின் 8 மாநில பாரம்பரிய நடனங்களை விழா மேடையில் கலைஞர்கள் அரங்கேற்றினர்.